ஸ்ரீ குபேர வீர ஆஞ்சனேயர் திருக்கோயில் ஸ்தல வரலாறு
ஜெய் ஸ்ரீ ராம் ஸ்ரீ ராமஜெயம்
ஸ்ரீ குபேர வீர ஆஞ்சனேயர்
திருக்கோயில்
நவக்கிரஹ கோட்டை, ஐஸ்வர்ய க்ஷேத்ரம்,
காமாக்ஷிபுரம், வாலாஜா பேட்டை.
ஸ்தல வரலாறு
நினைத்ததை நிறைவேற்றும் சக்தி வாய்ந்த ஸ்ரீ குபேர வீர ஆஞ்சனேயர் திருக்கோயில்.
சுவாமியின் விசேஷ
திருநாமம் ஸ்ரீ குபேர வீர ஆஞ்சனேயர். இந்த திருப்பெயரோடு
அனுக்ரஹம் செய்யும் இவரை சரணாகதி அடையும்போது
குபேர சம்பத்தும் தைர்ய, வீர்ய, ஆரோக்யமும் கிடைக்கும்.
அகத்திய மஹா முனிவர் இந்த க்ஷேத்திரத்தில் சிவ பூஜை
செய்து வரம் பெற்றவர். ஆகவே அகஸ்தீஸ்வரம் என்பது
புராணப் பெயராகும். பின்பு முகலாயர்கள் வருகைக்கு
பின் அழைக்கும் பெயர் தான் வாலாஜாபேட்டை.
இந்த க்ஷேத்ரத்தின் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என நான்கு
திசைகளிலும் சதுர் திக் பந்தனமாக அனுமனின் ஆலயம் பல
நூற்றாண்டுகளாக வழிபாட்டில் இருக்கிறது. அவ்வகையில்
குபேர திசையில் ஊரின் வடக்கு பகுதியில் குபேர மூலையாக
வடக்கு திசையில் வடக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாகவும்
புடைப்புச் சிற்பமாகவும் தலைக்கு மேல் வாலுடன் மணி கட்டிய
ரூபத்தில் ஆசி வழங்கும் அபய ஹஸ்தத்துடன் சௌகந்தி
புஷ்ப கதையுடன் திருக்குளத்தோடு சுமார் 221 கோடி ராமநாம
பிரதிஷ்டையோடு அபரிமிதமான மந்திர அதிர்வுகளோடு
வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தருபவர்தான் ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர்.
இங்கு ஹனுமன் பூஜித்த ஸ்ரீ ராமபாதம் இருப்பது மிகப்பெரிய விசேஷம்.
ஸ்ரீ ராம பாத தரிசனம்,
சகல பாப நிவாரணம். ராஜா கிருஷ்ணதேவராயர் 18 ஆண்டு
கால ராகு தசை நடக்கும் நேரத்தில் பல கஷ்டங்களையும்
இன்னல்களையும் அனுபவித்தார். அதற்கு தீர்வு காணும்
விதமாக பரிகாரம் தேடி அவரது குருநாதர் வியாசராயரை
அணுகிய போது (ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் குருநாதர்)
அவர் இந்த 18 ஆண்டு காலம் உனக்கு நீ நினைப்பது தங்கு
தடையின்று நடைபெற வேண்டுமானால் நீ விஜயம் செய்யும்
அத்தனை க்ஷேத்திரங்களிலும் உள்ள ஆஞ்சனேயரை
வழிபட்டு அங்கு நாக பிரதிஷ்டை செய்து ராகு கேதுவை
மனதார வணங்கும் போது நன்மைகள் நடக்கும் என்று
கூறினார். அவ்வாறு இந்த ஆலயத்திலும் ராகு கேது நாகர்,
காளிங்க நர்த்தன சந்தான கிருஷ்ண நாகர், சந்தர கிரண
நாகர் என மூன்று நாகங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு
மேன்மை அடைந்ததாக ஐதீகம்.ஆகவே இவ்வாலயத்தில் எந்தவொரு
பக்தர் பரிபூர்ண
சரணாகதியோடு பிரார்த்தனை செய்தாலும் அவர்களுக்கு
நவக்ரஹ தோஷமும், ராகு கேது தோஷமும் நிவர்த்தியாகும்.
இங்கு ஆஞ்சநேயர் வாலில் நவக்ரஹங்களும் இருப்பதாக
ஐதீகம். ஆகவே குபேர ஆஞ்சநேயரை தரிசித்து நவக்ரஹ
கோட்டையில் நவக்ரஹ தெய்வங்களை பத்தினி வாகன
சகிதமாய் ஸேவிக்கும் போது நவக்ரஹங்களும் உங்களுக்கு
நன்மையே அனுக்கிரஹம் செய்வார்கள். திருக்குளக்கரையில்
நவக்ரஹ கணபதி மற்றும் க்ருஷ்ண தேவராயர் வழிபட்ட
மூன்று நாக தெய்வங்களுக்கும் தனித்தனி சந்நிதி இருப்பது
இக்கோயிலின் மற்றுமொரு விசேஷம். மஹா மண்டபத்திலுள்ள
16 கால் தூண்களும் 16 செல்வ வளங்களை தருவதாகும். இந்த
ஆலயத்தில் எங்குமில்லாத வண்ணம் 108 தெய்வ சிற்பங்களை
தரிசனம் செய்ய முடியும். அதில் ராமாயண வரலாற்றில்
ராமர் குழந்தையாக பிறந்தது முதல் மன்னனாக முடிசூடி,
பட்டாபிஷேகம் நடந்தது வரை ராமாயணம் சுந்தரகாண்டம்
என அனைத்தும் 16கால் மண்டபத்தில் காட்சி தருகிறது.
ஆலய சன்னிதிகள்
ஆலய வளாகத்தில் ஸ்ரீ ஹனுமான் லக்ஷ்மண சஹித
ஸ்ரீ சீதா ராமச்சந்திர மூர்த்திக்கென தனி சந்நிதானம்
மற்றும் பக்த பிரகலாதருடன் லக்ஷ்மீ நரசிம்மர் ஷட்கோண
ஜ்வாலா சக்ர சஹித சுதர்சன மூர்த்திக்கும் தனி சன்னிதி
உள்ளது. அதைத் தொடர்ந்து நவக்ரஹ கோட்டையில்
நவக்ரஹ தெய்வங்களுக்கு பத்னி வாஹனத்தோடு 9
தனித்தனி சன்னிதானம், அஷ்டநாக மண்டபம், 27 நட்சத்திர
மூர்த்திகளும், 12 ராசி தேவதைகளும், மற்றும் கண்திருஷ்டி
போக்கக் கூடிய கண்திருஷ்டி கணபதி மூலவரும் இங்கு
அனுக்ரஹம் செய்கிறார். இவ்வாலயத்தில் திருமடப்பள்ளி
மற்றும் யாகசாலையும் அமைந்துள்ளது. யாகசாலையில் நித்ய
யாகம், பரிகார பூஜைகள், விசேஷ ஹோமம், பிராயச்சித்த
ஹோமம், கணபதி ஹோமம், திருமணம், சஷ்டியப்த பூர்த்தி,60, 70, 80ம்
கல்யாண வைபோகம், நவக்ரஹ ஹோமம்,
ஆயுஷ்ய ஹோமம், சந்தான ஹோமம், விவாஹ ஹோமம்,
நடைபெற்று வருகிறது.
ஐஸ்வர்ய க்ஷேத்ரம்
மாங்கல்ய பாக்யம் அளிக்கும் ஸ்ரீ நவக்கிரஹ நாயகியான,
பங்காரு காமாக்ஷியின் பாதகமலங்களில், 27 நட்சத்திரங்களும்,
12 ராசிகளும், நவகிரஹங்களும் பூஜிக்கும் விதமாக
அன்னை போல் தாயுள்ளம் கொண்டு அனுக்ரஹ தரிசனம்
தருகிறாள், ஐஸ்வர்ய மண்டபத்தில் சகல தேவதைகளும்,
வ்ருஷபாரூடனாக அர்த்தநாரீஸ்வரரும் காட்சியளிக்கின்றனர்.
ஷண்முக நாயகனாக சத்ரு சம்ஹார சுப்ரமண்ய மூர்த்தி
வள்ளி தெய்வானையோடு யானை வாகனத்தில் அற்புதமாக
காட்சி தருகிறார். அதை தொடர்ந்து அம்பாளின் படைத்
தளபதியாக வாராஹி தேவியும், துர்கா லக்ஷ்மி சரஸ்வதி
ரூபமாக ஸ்ரீ சண்டிகா பரமேஸ்வரியும், அம்பாளின் வலதுபுறம்
மஹாலக்ஷ்மி தாயாரும், இடதுபுறத்தில் மஹா சரஸ்வதி
தேவியும், அறிவையும் செல்வத்தையும் வாரி வழங்கும்
ரூபமாக அனுக்ரஹம் செய்கிறார்கள். காவல் தெய்வமாகவும்
க்ஷேத்ரபாலகராகவும் மஹா காலபைரவர் ஈசான மூலையில்
(வடகிழக்கு) அருளாசி வழங்குகிறார். மற்றும் சிவபெருமான்
அதிகார நந்தியுடன் தரிசனம் தருகிறார். அடுத்து
காமாக்ஷியின் ஸ்வரூபமாக இருக்கக்கூடிய காஞ்சி மஹா
பெரியவா ஸ்வாமிகள் அம்பாளின் முன்பு த்யான ரூபமாக
அமர்ந்து பக்தர்களை ஜெகத் குருவாக வழிநடத்துகிறார்.
அதனைத் தொடர்ந்து பாதாள சாய்பாபா தரிசனமும் ஸ்ரீ குபேர
வீர ஆஞ்சநேயர் சுவாமியின் மூலஸ்தான கோபுர தரிசனமும்
கோடி புண்ணியப் பலன்களையும் அமைதியையும் தரவல்லது.
எதிரே திருக்குள அமைப்பை காண்பது எண்ணிலடங்கா ஆனந்தத்தையும் மனஅமைதியையும்
தரும் என்பது ஸர்வ நிச்சயம். அதைத் தொடர்ந்து ‘தடாக பிரதக்ஷிணம்-தடங்கல்
நிவராணம்’ என்பதற்கேற்ப பாதாள கங்கா தீர்த்தமான
திருக்குளத்தை தரிசிப்பதாலும் பிரதக்ஷிணம் செய்வதும்
முப்பத்து முக்கோடி தெய்வங்களையும் வணங்கும் பலன்
ஏற்படும்., கோசாலைக்கு அருகில் ஸ்தல விருக்ஷமான
வில்வ மரம் அமைந்துள்ளது. மஹாரத உற்சவ மண்டபம்,
தசாவதார தரிசனம், அஷ்டலிங்க பிரதக்ஷிணம் போன்ற
சிறப்பம்சங்களும் இவ்வாலயத்தில் இருக்கிறது. ஆகவே
பக்தர்கள் இந்த ஆலயத்தில் 48 நிமிடமோ அல்லது 48
நொடியோ அமர்ந்து பிரார்த்தனை செய்தாலே நினைத்தது
நிறைவேறும், வேண்டியது நடக்கும்.
காஞ்சி மஹா பெரியவா ஸ்வாமிகள் அவரை நாடிவரும்
பக்தர்கள் துயர் நீங்க ஸ்ரீ ராமஜெயம் என்ற மஹா மந்திரத்தை
நாம ஜெபமாகவும் லிகித ஜெபமாகவும் எழுத சொல்வார்கள்.
அதன் பலன்களைப் பற்றி மஹா பெரியவா கூறும் போது ஸ்ரீ
என்ற சொல் லக்ஷ்மீ கடாக்ஷத்தை குறிக்கவல்லது. ராம என்ற
சொல் ஓம் நமோ நாராயணாய என்னும் அஷ்டாக்ஷரத்தின்
நாராயணாய என்பதின் இரண்டாவது எழுத்தும், நமசிவாய
என்னு பஞ்சாக்ஷர மந்திரத்தின் இரண்டாவது எழுத்தும்
கலந்தது தான் ராம ஆக ராம நாமத்தை சொன்னாலோ,
எழுதினாலோ, நினைத்தாலோ சாக்ஷாத் சிவ விஷ்ணு
ஆசிகள் கிடைக்கும். சிவானுக்ரஹம் இருக்கும் இடத்தில்
இயல்பாகவே வினாயகர், முருகர், அம்பாள், நவக்ரஹங்கள்
ஆகிய அனைவரும் ஆசிவழங்க முன்னிருப்பார்கள்.
அதேபோல நாராயணரின் அனுக்கிரகம் கிடைக்கும் போது
மஹாலக்ஷ்மி, கருடாழ்வார், ஆஞ்சநேயர் போன்ற அனைத்து
தெய்வங்களும் ஆசி வழங்க முன்னிருப்பர்.
அந்த அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதத்தால்
ஜெயம் என்னும் வெற்றி கிட்ட வேண்டும் என்பது பொருள்.
வெற்றி என்பது எந்த பக்தர்கள் எதை வேண்டி பிரார்த்தனை
செய்கிறார்களோ அவை அனைத்தும் தர்மமான நிலைப்படி
ஜெயமாக வேண்டும் என்பதே ஸ்ரீ ராமஜெயம் என்னும் மஹா
மந்திரத்தின் விளக்கம் என்று மஹா பெரியவர் கூறினார்.
அதை அடிப்படையாகக் கொண்டுதான் இங்கு பலகோடி
ஸ்ரீராமஜெயம் ராமநாமங்களோடும், சிவா விஷ்ணு ஆலய
அமைப்போடும், ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் அருளாசிபுரிகிறார்.
அதே போல விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ஸ்ரீ ராம ராம
ராமேதி என்னும் ச்லோகத்தில் ராமநாமத்தை மூன்று முறை
உச்சரிப்பதால் ஆயிரம் நாமம் சொன்ன பலன் ஏற்படும் என்று
ஈச்வரனே கூறுகிறார். அதுவே ஜென்ம ரக்ஷா மந்த்ரமும்
ஆகும். ஆகவே இங்கு வரும் பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம், ஸ்ரீ
ராம ஜெயம் என்னும் மந்திரத்தை 108 அல்லது 1008 முறை
ஜெபம் செய்தால் அனைத்தும் ஜெயம்தான்.
சுபமஸ்து.